திருச்சி மாவட்டம் லால்குடி தச்சன்குறிச்சி கிராமம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களது மகள் கனகவள்ளி. சோமசுந்தரம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். கனகவள்ளி தனது தம்பிக்கு மகள் துர்காவை திருமணம் செய்துவைத்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். துர்கா தனது கணவர் குழந்தைகளுடன் பாட்டி சீதாலட்சுமிக்கு சொந்தமான கூரை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். துர்கா தனது வீட்டிலேயே இ சேவை மையம் நடத்தி வந்துள்ளார். இந்த மையத்திற்கான லேப்டாப், பிரிண்டர், ஜெராக்ஸ் மெஷின் ஆகியவற்றை வீட்டில் வைத்துள்ளார். மேலும் துர்கா திருச்சியில் உள்ள ஒரு தனியார் அகாடமியில் அரசு தேர்விற்க்காக படித்து வருகிறார். இந்நிலையில் இன்று ( 24.12.2023 ) அனைவரும் வெளியில் சென்றுவிடவே பாட்டி சீதாலட்சுமி மட்டும் பக்கத்து வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.இந்நிலையில் திடீரென கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினா் புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாரதி தலைமையில் நிலைய அலுவலர் போக்குவரத்து திராவிடன், வீரர்கள் தரணிதரன், ஜான் பிரான்சிஸ், அருண்ராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீ பக்கத்து வீடுகளில் பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் இ சேவை மையத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் மெஷின், லேப்டாப், பிரிண்டர், துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு 2 லட்சம் இருக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் காணக்கிளியநல்லூர் போலீசார் தீ விபத்து எப்படி ஏற்பட்டது, மின் கசிவினால் ஏற்பட்டதா, அல்லது யாரும் சதி வேலை செய்தார்களா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.