Rock Fort Times
Online News

தமிழகத்தில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் பொங்கல் முதல் தொடங்கப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…!

78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு  சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகள். விடுதலையை பாடுபட்டு பெற்றுக் கொடுத்த தியாகிகளை போற்றுவோம். சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதி ஏற்போம். விடுதலை எளிதாக கிடைக்கவில்லை.  300 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு கிடைத்த சுதந்திரம் இது.  ரத்தத்தையே கொடையாக தந்து பெற்ற சுதந்திரம் இந்திய சுதந்திரம். மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர். 4-வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன். விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. எந்த மாநிலமும் செய்யாத வகையில் அனைத்து தியாகிகளையும் போற்றி வருகிறது திராவிட மாடல் அரசு. சமூகநீதி, சமத்துவம், மொழிப்பற்று ஆகிய கருத்தியலின் அடித்தளத்தில் செயல்படும் இயக்கம்தான் திமுக.  வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். நேதாஜியின் இந்திய விடுதலை படையில் கரம் கோர்த்தவர்கள்தான்  தமிழர்கள். கோவையில் வ.உ.சி.க்கு சிலை, கடலூரில் அஞ்சலை அம்மாளுக்கும், நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கத்துக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்களால் உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

கடந்த 3 ஆண்டில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும்  வளர்ச்சியடைந்துள்ளது. சமூகத்துக்காகவும் குடும்பத்துக்காகவும் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000  வழங்குகிறோம்.  திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் 65 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி கிடைத்துள்ளது.  2026-ம் ஆண்டு ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். “முதல்வர் மருந்தகம்” எனும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்படும்.  பொங்கல் திருநாள் முதல் “முதல்வர் மருந்தகத் திட்டம்” செயல்படுத்தப்படும். விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.  விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்திலிருந்து 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்