Rock Fort Times
Online News

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல் பாதியில் முறிந்தது:- காதலியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு…!

சேலம் மாவட்டம், மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், இன்று (16-04-2025) சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி செல்வதற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தனது கை நரம்பை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் சேலம் மாவட்டம், ஆட்டாயம்பட்டியைச் சேர்ந்த மோகன பிரியன் என்பது தெரிய வந்தது. அவரும், கல்லூரி மாணவியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. அந்த மாணவியை சந்தித்து பேசுவதற்காக சேலம் வந்துள்ளார். அப்போது, தன்னை விட 1 வயது சிறியவர் என்பதாலும், ஐஐடி முடித்துவிட்டு வேலை தேடி வருவதாலும் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என அந்த மாணவி கூறியுள்ளார். மேலும், கல்லூரி மாணவிக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த மோகன பிரியன், மாணவியை கத்தியால் குத்தி யுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்