கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் கேலோ இந்தியா போட்டி நடைபெற்று வருகிறது. திருச்சியில், நேற்று தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதான உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.
4 நாட்கள் நடைபெறும் மல்லர் கம்பம் போட்டியில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மல்லர் கம்பம் விளையாட்டில் நிலைநிறுத்தப்பட்ட மல்லர் கம்பம், தொங்கவிடப்பட்ட மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. நேற்று ஆண்களுக்கான குழு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்று(22-01-2024) பெண்களுக்கான குழு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு விளையாடினர். அப்போது, கயிறு மல்லர் கம்பம் பிரிவில் பெண்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது தெலுங்கானாவை சேர்ந்த 15 வயது வீராங்கனை நந்தினி கயிறு மல்லர் கம்பத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த வீராங்கனையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு போட்டியின்போது சிறுமி தவறி விழுந்து கையில் முறிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.