திருச்சி துறையூர் அருகே சுவாமி திருவீதி உலாவின் போது கலசம் கழன்று விழுந்ததில் கல்லூரி மாணவி படுகாயம்…!
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள கோட்டப்பாளையம் தெற்கு தெரு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பொங்கல் பூஜை, நேர்த்திக்கடன் செலுத்துதல், கிடாவெட்டு, அக்னி சட்டி, பூக்குழி இறங்குதல் முதலான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று (25-05-2024) இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மருதை வீரன், மாரியம்மன், பகவதி அம்மன் முதலான உற்சவ சுவாமி சிலைகள் திருவீதி உலா நடைபெற்றது. இன்று அதிகாலை தெற்கு காலனியில் சப்பரங்கள் திருவீதி உலா சென்றது. ஏராளாமான பெண்கள் சப்பரங்களை இழுத்துச் சென்றனர். அப்போது பகவதி அம்மன் சப்பரத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த கலசம் எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பிகளின் மீது உரசி கலச பகுதி துண்டிக்கப்பட்டு சப்பரத்தின் பின் பக்கம் விழுந்தது. இதில், பகவதி அம்மன் சப்பரத்தின் பின் பக்கம் அமர்ந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹேமாவின் தலையில் கலச பகுதி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த ஹேமாவை உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.