Rock Fort Times
Online News

மறைந்த எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு…!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். கடந்த 1947-ல் ஆண்டிபட்டியில் அவர் பிறந்தார். இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட அவர், பல்வேறு சிறுகதைகள், நாவல்களை எழுதி உள்ளார். வெக்கை, பிறகு, வாய்க்கால், வரப்புகள், அஞ்ஞாடி போன்ற நாவல்கள் அவரது எழுத்தில் புகழ் பெற்றவை. சிறுகதை, மொழிபெயர்ப்பு, சினிமா என பல தளங்களில் இயங்கி வந்த கரிசல் காட்டுப் படைப்பாளியான பூமணி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து எழுதிய பிரமாண்ட வரலாற்று நாவலான ‘அஞ்ஞாடி’-க்கு 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 1982-ல் வெளியான இவரது ‘வெக்கை’ நாவல், சிறுவன் சிதம்பரத்தையும் அவனது தந்தை பரமசிவனையும் மையமிட்டிருப்பது. ஒரு குற்றத்தையும், அதைத்தொடர்ந்து அவர்களின் தலைமறைவு வாழ்க்கையையும் பேசும் இந்நாவல் வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமாக வெளிவந்தது.

அரசு மரியாதை,

பூமணி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியத் துறையில் பூமணியின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்