மதுரை அருகே திருச்சிக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து பயங்கர மோதல்: 6 பேர் பலி…!
சென்னையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. இந்த ஆம்னி பேருந்து இன்று( ஜூலை 13) அதிகாலை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வண்டிநகரம் பகுதி நான்குவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் மதுரையில் இருந்து திருச்சி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்து இடது பக்கம் திரும்பி சாலையோரம் உள்ள பயணிகள் நிழற்குடையில் மோதி நின்றது. இதில் ஆம்னி பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு பேருந்துகளிலும் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 42 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.