திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடந்தது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடூரமான சம்பவங்கள் நடந்தது. அதற்கு நரேந்திர மோடி தான் காரணம் என கூறியவர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவோம் என அம்மாநில துணை முதலமைச்சர் தொடர்ந்து பேசி வருகிறார். அவர்கள் அணை கட்ட முயற்சித்தால் அதை நாங்கள் ஒன்றிணைந்து முறியடிப்போம். தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு ராஜபாளையத்தில் 28, 29, 30 ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் தோல்வி அடைந்த பின்னர் பா.ஜ.க ஆட்டம் காண தொடங்கி விட்டது.
மகாராஷ்டிராவில் சரத்பவார் கட்சியை உடைத்து அஜித்பவார் துணை முதலமைச்சராகவும், அவருடன் சென்றவர்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அவர்கள் பணியை வெற்றிகரமாக செய்திருக்கிறது. அஜித்பவாருக்கும், அவருடன் பதிவியேற்ற 8 அமைச்சர்களுக்கும் அமலாக்கத்துறை வழக்கு இருக்கிறது. அமலாக்கத்துறை பா.ஜ.க.வின் கைத்தடியாக மாறி விட்டது. நாடு முழுவதும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி கட்சிகளை உடைக்கும் முயற்சியை பா.ஜ.க தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழ்நாட்டிலும் அந்த முயற்சியை அவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அமலாக்கத்துறைக்கு தலைவர் யார் என்றே தெரியவில்லை. அண்ணாமலை தான் அமலாக்கத்துறைக்கு வழி காட்டுகிறார். பிரச்சனைகளை மூடி மறைத்து திசை திருப்ப பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.