Rock Fort Times
Online News

திருச்சியில் கூலிப்படையினர் உள்பட 6 பேர் துப்பாக்கியுடன் கைது (படங்கள்)

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் ராமராஜ் (வயது 32). இவரது மனைவி ஹேமலதா. ராமராஜ் திருப்பூரில் ஜவுளி, பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராஜேஷ் (41) என்பவருடன் பனியன் வியாபாரம் செய்த வகையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் ராமராஜ், ராஜேஷிடம் ரூ.9 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த தொகையை ராஜேசுக்கு, ராமராஜ் 2 வருடங்களாக திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூரில் ராமராஜ் நடத்தி வந்த பனியன் கம்பெனியில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தில் உள்ள தனது மனைவி ஹேமலதாவின் தந்தை வீட்டில் வந்து தங்கி இருந்தார். இது பற்றிய தகவல் அறிந்த ராஜேஷ், ராமராஜை கடத்தி சென்று மிரட்டி அவரிடம் கொடுத்த கடனை வாங்க முடிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 24-ந் தேதி கூலி படையினரான சென்னை கடப்பாக்கம் பகுதியை சேர்ந்த முஸ்தபா (28), சென்னை ஆவடியை சேர்ந்த கீர்த்தி (38), தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த மணிகண்டன் (34), அதே பகுதியை சேர்ந்த வசந்த் (24), சென்னை வியாசர்பாடியை சேர்ந்த இருதயராஜ் (43) ஆகிய 6 பேரும் மணிகண்டம் அருகே உள்ள தனியார் கல்லூரி முன்பு நின்று கொண்டு ராமராஜை அங்கு வரவழைத்துள்ளனர். அங்கு சென்ற ராமராஜை, ராஜேஷ் உள்ளிட்ட கூலிப்படையினர் துப்பாக்கி முனையில் காரில் கடத்தி சென்றனர். கடன் கொடுத்தவர்கள் அழைத்ததாக கூறி சென்ற கணவர் இரவாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றம் அடைந்த ஹேமலதா இதுகுறித்து மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் உத்தரவின் பேரில் நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மேற்பார்வையில், மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திரவியராஜ் மற்றும் போலீசார் தனசேகர், இளையராஜா ஆகியோர் ராமராஜின் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்து கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தீவிரமாக தேடி வந்தனர்.

இதனையடுத்து போலீசார் ராஜேசிடம் நடத்திய விசாரணையில் ராமராஜ் தன்னிடம் வாங்கிய கடன் ரூ.9 லட்சத்தை கொடுக்காமல் ஆண்டு கணக்கில் காலதாமதம் செய்ததால் அவரிடம் பணத்தை வசூல் செய்வதற்காக கூலிப்படையை வைத்து கடத்தியதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், முஸ்தபா, கீர்த்தி, மணிகண்டன், வசந்த், இருதயராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு கை துப்பாக்கி, அரிவாள், கத்தி மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் திருச்சி ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்