தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 58). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளரான இவர், தற்போது நகரக் குழு உறுப்பினராக இருந்து வந்தார். இவரின் மனைவி லெட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ராஜசேகரன் பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நகைக்கடை நடத்தி வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சுமார் 25 ஆண்டுகள் திறமையாக செயல்பட்டதால் பட்டுக்கோட்டை பகுதிகளில் எல்லோருக்கும் பரிச்சயமானவராக திகழ்ந்து வந்தார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டைக்கு வந்த திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் திருட்டு நகை வாங்கியதாக கூறி ராஜசேகரனிடம் விசாரணை நடத்தினர்.பின்னர் அவரையும், அவரது மனைவியையும் விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு மேல் இருவரிடமும் விசாரித்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் அவரை கட்சி நிர்வாகிகள் பெரும் முயற்சி எடுத்து அழைத்து வந்தனர். போலீசாரின் விசாரணையால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜசேகரன் நேற்று ( 25.06.2023 ) இரவு வேளாங்கண்ணியிலிருந்து எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், ராஜசேகரன் பாரம்பர்யமான குடும்பத்தை சேர்ந்தவர் . பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர். எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். இந்தநிலையில் திருட்டு நகை வாங்கியதாக அவரிடமும், அவரது மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பிறகு திருச்சிக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
இதைக் கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நகை தயாரிக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். விசாரணையின் போது குற்றப்பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் ராஜசேகரன் மற்றும் அவரது மனைவியிடம் கடுமையாக நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருமே கடும் மனஉளைச்சலில் இருந்திருக்கின்றனர். இந்தநிலையில், நேற்று இரவு வெளியே சென்ற ராஜசேகரன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். போராட்ட மனநிலை கொண்ட அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என யாருமே நினைக்கவில்லை” என்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் எம்.எல்.ஏவான ரெங்கராஜன் கூறுகையில், ராஜசேகரன் தவறு செய்வதற்கு வாய்ப்பில்லை. பெண் போலீஸ் அதிகாரி விசாரணை என்ற பெயரில் கடுமை காட்டி போராட்ட குணம்கொண்ட ராஜசேகரனை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறார். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.