பா.ஜ.க.வுக்கு எதிரான தலைவர்கள் கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கப்படும்..
திருச்சியில் திருமாவளவன் பேட்டி..
முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதிக்கு திருவாரூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். முன்னதாக அவர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 23-ம் தேதி பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் பா.ஜ.க.அரசு எதிர்ப்பு கட்சித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தை தடுக்கும் விதமாக மோடி அரசு தொடர்ந்து பல்வேறு சதி திட்டங்களை வகுக்கிறது. அதன் விளைவாகத்தான் அமலாக்க துறையை ஏவி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவரை கைது செய்துள்ளனர்.
மணிப்பூரில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் கும்பல்களால் பழங்குடியின மக்களுக்கு இடையே இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாட்டை உருவாக்கி அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி இன்று பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் மிசோரம் போன்ற அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சங்பரிவார் கும்பல்கள் மணிப்பூரில் காலடி வைத்ததில் இருந்து அங்கு வன்முறை அதிகரித்துள்ளது. இவை அனைத்தையும் பிரதமர் மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். யோகா செய்யுங்கள் என்று அறிவுரை கூறி வருகிறார்.
இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ள பா.ஜ.க.எதிர்ப்பு அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து கட்டாயம் விவாதித்து ஒரு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் முன் வைக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவரை ஆந்திர மாநில காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றபோது எதற்காக கைது செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதால் அவருடைய குடும்பத்தாரையும் சேர்த்து கைது செய்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி உள்ளனர். குறிப்பாக பெண்கள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் தலையிட்டு தற்போது அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் இருவர் மீட்கப்படாத நிலையில் அவர்களும் மீட்கப்பட வேண்டும். தமிழக அரசு இதில் தலையிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கான நீதியை வழங்கிட முன்வர வேண்டும். மேலும் இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட சித்தூர் காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து வருகின்ற 26- ம் தேதி ஆந்திர மாநில சித்தூர் விடுதலை சிறுத்தை கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள பா.ஜ.க. விலகினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், முதலில் கூட்டணியில் இருந்து பா.ஜ.க. விலகட்டும் பிறகு பார்ப்போம் என்றார். அரசு மதுபானங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறதே என்ற கேள்விக்கு, மது பாட்டில்களில் கலந்துள்ள மெத்தனால் தான் காரணம் என்று பதில் அளித்த அவர், இந்த விஷயத்தில் அரசு மிக கவனமுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.