Rock Fort Times
Online News

தொகுதி மறுவரையறை மசோதா: திமுகவின் ஆதரவை வரவேற்ற தமிழிசை சவுந்தரராஜன்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிச்சயமாக இந்த மசோதா வெற்றி பெறும். ஏனெனில், மாற்றுக் கருத்துகளைக் கொண்ட கட்சிகள்கூட ஒருமித்த கருத்துக்கு வந்து இதற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் சேர்த்து நிறைவேற்றப்பட உள்ளது. இன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட உள்ள இந்த வெற்றித் திருநாளில் மற்றொரு வெற்றியையும் நாம் காண இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை இன்று மூன்று வெற்றித் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. முதலாவது, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது. இரண்டாவது, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. மூன்றாவது, இன்று “காசி தமிழ் சங்கமம் 5.0” திருக்குறள் கற்போம் என்ற கொள்கையுடன் தொடங்குகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்