Rock Fort Times
Online News

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு தமிழ்நாட்டுக்குச் செய்யும் இரட்டை துரோகம்!- அமைச்சர் வன்னி அரசு காட்டம்…

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக எடுத்துள்ள நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பது, திருப்பரங்குன்றம் தீர்ப்பைவிடப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்திருந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, “நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான பிரதிநிதித்துவ சதவீதத்தைக் குறைத்திருப்பார்கள். ஆனால், தற்போது மசோதாவின் நகல் கிடைத்துள்ளது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியக் கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய மூன்றாண்டுகாலத் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். தற்போது நாம் இந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்குப் பதிலாக, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைத்திருப்பார்கள். அது தமிழ்நாட்டிற்குப் பேராபத்தாக அமைந்திருக்கும். அதை நாம் தடுத்துவிட்டோம். நாம் எதிர்பார்த்ததைப் போலவே இந்த மசோதா வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கைவிட்டு, தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களிக்கப்போவதாக திமுக வெளிப்படையாக அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநில உரிமைகளுக்காகப் போராடிய இயக்கமான திமுக, பாஜகவுடன் கைகோர்த்து தமிழ்நாட்டின் முதுகில் குத்தும் வகையில் செயல்படுவதைத் தமிழர்களும் மதச்சார்பற்ற சக்திகளும் மன்னிப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவின் இந்த இரட்டைத் துரோகத்தையும், இரட்டை நாடகத்தையும் வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது என்றும் வன்னி அரசு தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்