பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வழக்கு: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது…!
மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் அழுத்தம் கொடுத்தனர். இதனிடையே நவம்பர் 23-ந் தேதி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், அருள் விக்னேஷ் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். மேலும், ஐஜி காமினி மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. நவம்பர் 25-ந் தேதி அருள் விக்னேஷின் வீட்டுக்குச் சென்ற காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரிடம் சம்மன் வழங்கினார். இதனிடையே கள்ளக்குறிச்சியில் விசாரணையைத் தொடங்கிய ஸ்ருஷ்டி சிங், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். மேலும், மாவட்ட ஆட்சியரின் கணவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 27) அருள் விக்னேஷின் வீட்டுக்கு விசாரணை அதிகாரியான ஸ்ருஷ்டி சிங் நேரில் சென்றார். அங்கு அருள் விக்னேஷிடம் தீவிர விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் முடிவில் அருள் விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் மாவட்ட ஆட்சியரின் பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Comments are closed.