சென்னையில் இசையமைப்பாளர் அனிருத்- காவியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி… பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து!
பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவியா மாறனுக்கு கடந்த நவம்பர் 11-ம் தேதி கிரீசில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட திருமண விழாவில் ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் மற்றும் மாறன் குடும்பத்தினர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து, இன்று (21-11-2026) சென்னையில் மணமக்களுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவியா கலாநிதி மாறன் -அனிருத் தம்பதிக்கு கடிதம் மூலம் பிரதமர் மோடி திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், காவியா மற்றும் அனிருத் தம்பதி வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் பயணத்தை தொடங்கும் இந்த மங்களகரமான திருமண நாளில், அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தம்பதியினர் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும் பாசத்தையும் வளர்த்துக் கொள்ளட்டும். அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து குடும்பத்திற்கு முன்னேற்றத்தைக் கொண்டு வரட்டும். 2026, நவம்பர் 21ம் தேதி அன்று நடைபெற உள்ள திருமண விழாக்களுக்கு என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த மகத்தான தருணத்தில் எனது வாழ்த்துகளையும் நல்வாழ்த்துக்களையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி :
காவ்யா மாறன் – அனிருத் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அன்புள்ள கலாநிதி மாறன் அவர்களுக்கு, உங்களது அன்பு மகள் காவியாவின் திருமணத்திற்கு தாங்களும் காவேரியும் என்னை நேரில் வந்து அழைத்தமைக்கு மிக்க நன்றி. இந்த மங்களகரமான நிகழ்விற்காக குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தயாராகி வருவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. போற்றுதலுக்குரிய கலைஞரின் ஆசிகளுடன், இந்த திருமண கொண்டாட்டங்கள் நிச்சயமாக பொலிவுடனும் அழகுடனும் நிறைந்திருக்கும். காவியா மற்றும் அனிருத் ஆகியோருக்கு எனது ஆசிகளையும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் ஒருவருக்கொருவர் பலமும், நட்பும், அன்பும் அளித்து, தங்களது இணைந்த வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.