Rock Fort Times
Online News

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா: மகா ரதம் தேரோட்டம் கோலாகலம்…!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் தற்போது தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் விநாயகர் தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர் தேர் நிலைக்கு வந்ததும் முருகர் தேரோட்டம் நடைபெற்றது. முருகர் தேர் நிலைக்கு வந்ததும் பெரிய தேரான அருணாசலேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி மாட வீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுப்பார்கள். தேரோட்டத்தையொட்டி திருவண்ணாமலையில் வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 4 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியிலும், முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் ஏற்றப்பட உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்