Rock Fort Times
Online News

சென்னையில் ரூ.140 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: இதற்காவது முதலமைச்சர் விஜய் வாய் திறந்து பதில் சொல்வாரா?* மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னை, மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்து, அதுதொடர்பாக இருவரைக் கைது செய்துள்ளார். ஏற்கனவே, நாகை மாவட்டம், திருப்பூண்டியில் தவெக நிர்வாகியான பூபாலன் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடிக்கும் அதிகமாக உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் மீண்டும் ரூ.140 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

சென்னையில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை மத்திய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது. கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான ‘மெத்’ பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே டி.ஆர்.ஐ. அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை? பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது. தொடரும் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என இந்த ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் ‘வழக்கு பதியப்பட்டுள்ளது’ என்பதை மட்டுமே பதிலாகத் தரப்போகிறாரா?. போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது? முதலமைச்சர் விஜய் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்? த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்