Rock Fort Times
Online News

கரூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை… மகள் வாழ்க்கை சரியாக அமையாததால் துயர முடிவு..!

கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் மற்றும் பேரன், பேத்தி ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு;

கரூரை அடுத்த சின்ன காளிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (63). விவசாயி. இவரது மனைவி ஜானகி (60). இவர்களுக்கு கண்ணன்(40) என்ற மகனும், சுகுணா(34) என்ற மகளும் உள்ளனர். கண்ணன், கரூர் வெங்கமேட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுகுணா, கரூரை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் கணவர் பிரபு (38) மற்றும் மகள் சிவானி (10), மகன் ஆதிரன் (4) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுகுணா, தீபாவளி பண்டிகையின்போது தனது கணவரின் வீட்டில் பண்டிகை கொண்டாடாமல் சின்ன காளிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கொண்டாடியதாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை முடிந்து கணவர் வீட்டுக்குச் சென்ற சுகுணாவுக்கும், அவரது கணவர் பிரபுக்கும் அடிக்கடி தகராறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்தசூழலில் கணவருடன் கோபித்துக் கொண்டு சுகுணா தனது குழந்தைகள் ஷிவானி மற்றும் ஆதிரன் ஆகியோருடன் சின்ன காளிபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனிடையே தனது மகளின் வாழ்க்கை சரியான முறையில் அமையவில்லையே என ராமசாமி தனது உறவினர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான ராமசாமி அவரது மனைவி ஜானகி, மகள் சுகுணா, பேத்தி சிவானி, பேரன் ஆதிரன் ஆகியோர் ராமசாமியின் வீட்டிற்கு அருகில் உள்ள அவர்களுக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில் நேற்று இரவு குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இன்று இதனைக் கண்ட அப்பகுதியினர் உடனே கரூர் வாங்கல் காவல் நிலையத்திற்கும், கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து சடலமாக மிதந்த ராமசாமி உள்ளிட்ட ஐந்து பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து குடும்பத்தகராறில் கிணற்றில் குதித்து ராமசாமி உள்ளிட்ட ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்