Rock Fort Times
Online News

புது ராஜ்ஜியம்… புதிய மன்னர்கள்…* திருச்சி மாவட்ட திமுகவில் கட்சிப் பதவிகளை பிடிக்க போட்டா போட்டி…!

தமிழக அரசியல் வரலாற்றில், 50 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் இல்லாத அரசியல் கட்சி அரசமைத்திருக்கிறது. வலிமையான கட்சி கட்டமைப்பு, தங்களுக்கான வாக்கு வங்கி, பண பலம் உள்ளிட்ட எல்லாம் இருந்தும் நாம் எப்படி தேர்தலில் தோற்றோம் என அதிமுக – திமுக ஆகிய இருபெரும் கட்சிகளும் பயங்கரமாக யோசித்து வருகின்றன. இதில் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக சுதாரித்துக் கொண்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தமிருந்த 77 கட்சி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 110 ஆக இதன் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. திமுகவில் புது ரத்தம் பாய்ச்சவும்,
பல ஆண்டுகளாக ஒரே பதவியில் இருந்து கொண்டு குறுநில மன்னர்கள் போல செயல்பட்ட மாவட்ட ,ஒன்றிய நிர்வாகிகளுக்கும் கட்சி விதிகளில் திருத்தம் செய்து கட்டம் கட்டப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட செயலாளர்களுக்கான வயது வரம்பு 70 ஆகவும், ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கான வயது வரம்பு 60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒருவர் அதிகபட்சமாக ஒன்றிய பொறுப்புகளில் 2 முறை மட்டுமே இருக்க முடியும் எனவும் புது விதி வகுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், திருச்சி மாவட்டத்திலும் புதிய மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை நியமிக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே திருச்சி மத்திய, வடக்கு,தெற்கு என மூன்று மாவட்டங்களாக இருந்த நிலையில், இதன் எண்ணிக்கை நான்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, முசிறி துறையூர் ஆகிய தொகுதிகள் திருச்சி வடக்கு மாவட்டமாகவும்,
ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகள் மத்திய மாவட்டமாகவும், மணப்பாறை திருவெறும்பூர் உள்ளிட்டவை தெற்கு மாவட்ட கட்டுப்பாட்டிலும், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய தொகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு புதிதாக திருச்சி கிழக்கு மாவட்டமாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு நிர்வாகிகளும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர். அந்தவகையில், ஏற்கெனவே இருந்த கட்சியின் கட்டமைப்பு கிளையில் தொடங்கி மாவட்டம் வரை முற்றிலுமாக மாற்றப்பட உள்ளது. உதாரணமாக மண்ணச்சநல்லூரில் இதற்கு முன்பு 3 ஒன்றியங்கள் இருந்தன. தற்போது இதன் எண்ணிக்கை 5ஆக மாற இருக்கிறது. மத்திய மாவட்ட திமுகவில் ஒரே ஒன்றியமாக இருந்த மணிகண்டம் 3 ஆக பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்தநல்லூர் 2 ஆக மாற்றப்பட்டுள்ளது.தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை 2 ஒன்றியங்களாகவும், வையம்பட்டி 3 ஒன்றியங்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படி கட்சியின் அடிமட்டம் தொடங்கி மாவட்டம் வரை மறுசீரமைப்பு நடவடிக்கையை திமுக தலைமை மேற்கொண்டிருக்கிறது. இது ஆண்டாண்டு காலமாக கட்சியை தன்வயப்படுத்தியிருந்த நிர்வாகிகளுக்கு கலக்கத்தையும், கருப்பு சிவப்பு கரை வேஷ்டி கொண்ட இளைஞர்களுக்கு புதிய துவக்கத்தையும் தந்திருக்கிறது.

எனவே, தற்போதே தங்களுக்கு வேண்டிய சோர்ஸ்கள் மூலமாக தங்களுக்கான பதவியை பெறவும், ஏற்கெனவே உள்ள கட்சிப்பதவிகளை தக்கவைக்கவும் மலைக்கோட்டை மாவட்ட உடன்பிறப்புகள் படாதபாடு பட்டு வருகின்றனர். அந்தந்த பகுதிகளின் ஜாதி, சமூக பலம், அரசியல் பின்னணி ஆகியவற்றை முன்னிறுத்தி எங்களுக்குதான் பதவி வேண்டும் என மாவட்ட செயலாளர்களையும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் நச்சரித்து வருகின்றனராம். ஆனால் மாவட்ட செயலாளர்களே உட்கட்சி தேர்தல் நடத்தியே தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால் அவர்களே எங்கள் குறையை யாரிடம் சொல்வதென தெரியாமல் குளிர் காய்ச்சலில் நடுங்கி வருகின்றனராம்.

ADVERTISEMENT

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்