திருத்துறைப்பூண்டியில் தனியார் பள்ளியில் 3 வயது மாணவன் மீது தாக்குதல்: ஆசிரியை, பெண் உதவியாளர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு…!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கச்சேரி சாலையைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மகிமா. இந்தத் தம்பதிக்கு சர்வீம் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. இச்சிறுவன் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள சாய்ராம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ரீகேஜி படித்து வருகிறான். இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனின் கன்னம் மற்றும் உடலில் காயங்கள் இருந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது, ஆசிரியர் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் தந்தை கோபிநாத், பள்ளிக்குச் சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட்டுள்ளார். அப்போது, சிறுவனை நைலான் கயிற்றால் கட்டிவைத்து, ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் ஆகியோர் கடுமையாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, கோபிநாத் சிற்றரசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் பெண் உதவியாளர் செல்வி ஆகிய இருவர் மீதும் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இருவரையும் தேடி வரும் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.