Rock Fort Times
Online News

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் குழுவாக செல்வோருக்கு பேருந்து வசதி… தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு..!

கேரளா மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள்
விரதம் இருந்து, இருமுடி அணிந்து கோவிலுக்கு சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை
ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழக பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநிலம் பம்பைக்கு, 100 சிறப்பு சொகுசு பேருந்துகள், வருகிற ஜனவரி 17 வரை இயக்கப்பட உள்ளன. இது குறித்து, விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவின்போது, அதிகளவில் பக்தர்கள் செல்வர். எனவே, பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து நவம்பர்
16 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, கேரள மாநிலம் பம்பைக்கு சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ‘ஏசி’ மற்றும் ’ஏசி’ அல்லாத பேருந்துகள், படுக்கை வசதி என, 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணியர் www.tns tc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம். குழுவாக செல்லும் பக்தர்களுக்கு, வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். இதுதொடர்பாக 94450 14446, 94450 14424 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்