Rock Fort Times
Online News

மனு கொடுக்க வந்தவர் மீது கொலை வெறி தாக்குதல்: தமிழக துணை சபாநாயகர் மீது நடவடிக்கை கோரி துறையூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…!

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவிசங்கர். அவருக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. இந்தநிலையில் அவரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க வந்த ஒருவரை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததோடு துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், தமிழக வெற்றிக்கழக தலைமை அவரை அழைத்து கண்டித்ததாக மட்டும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை போதாது, துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி துறையூரில் இன்று (18-11-2026) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, துணை சபாநாயகர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் துறையூர் பேருந்து நிலையம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர். மனோகரன், முன்னாள் எம்பி ரத்தினவேல், திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ், மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று துணை சபாநாயகர் ரவிசங்கரை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்