Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், யாகப்புடையான்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு… * பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு…!

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அளுந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட யாகப்புடையான்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கல்லூரி மாணவிகள் ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது;

யாகப்புடையான்பட்டியில் புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயில வருகை தருகின்றனர். கோவில்களும் அமைந்துள்ளன. எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் தேவையற்ற வீண் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும். ஆகவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

பாலப் பணியால் பாதிப்பு :

இதேபோல எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திர நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த அரசு பொது சுடுகாட்டு இடம், பஞ்சப்பூர் – குடமுருட்டி இணைப்புச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த இடத்தில் பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அப்பகுதியில் உயிரிழப்புகள் ஏற்பட்டால் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கோரையாறு தாண்டியவுடன் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் புதிய சுடுகாட்டிற்கான இடத்தை ஒதுக்கி அளவீடு செய்து, சுற்றுச்சுவர் மற்றும் தண்ணீர் வசதியுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்