தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும்… கே.என்.நேரு இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு…!
திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் – சங்கரி ரவிச்சந்திரன் ஆகியோரின் புதல்வர் விஷால் நாராயண் – பெங்களூரு ஜெகதீஷ் பாட்டில் – அனுபமா ஜெகதீஷ் பாட்டில் ஆகியோரின் புதல்வி ரிஷா பாட்டில் ஆகியோரின் திருமணம் சென்னை நீலாங்கரை கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள
ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று( நவம்பர் 16) நடைபெற்றது. திருமணத்தை திமுக தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது;
திருச்சியினுடைய தீரர்கள் வாழக்கூடிய அந்த மாவட்டத்தினுடைய ஒரு செயல்வீரராக, ஒரு ஆற்றல்மிக்க தொண்டராக, திருச்சி என்ற வரலாற்றுச் சிறப்புக்குரிய அந்த மாவட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக உருவாக்கித் தருவதற்குப் பாடுபட்டு, தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய அன்புக்குரிய சகோதரர் கே.என்.நேரு இல்லத்தில், அவருடைய தம்பியினுடைய அருமை மகன், நம்முடைய சகோதரர் ரவிச்சந்திரன், சங்கரி ஆகியோருடைய அருமை மகன் விஷால் நாராயணன், மணமகள் ரிஷா பாட்டீல் மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இங்கு எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். இது நேரு இல்லத்தினுடைய திருமணம். நேரு இல்லத்தினுடைய திருமணமாக இருந்தாலும், அவருடைய தம்பி ரவியினுடைய மகனுடைய திருமணமாக இருந்தாலும், இந்தத் திருமணத்தைப் பொறுத்தவரையில் நான் பெருமையோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், இது என்னுடைய வீட்டுத் திருமணமாகக் கருதி நான் இந்த விழாவிலே கலந்து கொண்டிருக்கிறேன்.
நேருவினுடைய பணிகளைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். அதுவும் குறிப்பாக, அவர் அமைச்சராக இல்லை என்று சொன்னாலும், இன்றைக்கும் அவர் அமைச்சராகத்தான் அந்த மாவட்டத்தில் இருக்கிறார் என்று சொன்னார்கள்.
அதேபோல என்னைப் பற்றிச் சொல்லுகிறபோது சொன்னார்கள். ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் நீங்கள்தான் எங்களுக்கு முதல்வர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதை இனிமேல் சொல்லாதீர்கள். ஏனென்றால், ஒரு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் நம்முடைய ஆட்சி உதயமாகத்தான் போகிறது. எனவே, அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
நேருவினுடைய உழைப்புக்கு இலக்கணமாக, நேருவினுடைய உழைப்புக்கு அடையாளமாக இன்றைக்குப் பல பணிகளை நான் எடுத்துச் சொல்ல முடியும். ஒரு மாநாட்டை நடத்துவதற்கும், அதை வரலாறாக மாற்றுவதற்கும் நேருவிற்குத்தான் அதிகமான அளவிற்குப் பங்கு இருக்கிறது என்பதையும் நான் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு விவசாயக் குடும்பத்திலே பிறந்து, திமுகதான் தன் உயிர்மூச்சு, கலைஞர்தான், அவர் சொல்தான் எனக்கு வேதவாக்கு என்ற நிலையிலே பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடியவர்.
ஒன்றியச் செயலாளராக, ஒன்றியத்தினுடைய பெருந்தலைவராக, மாவட்டச் செயலாளராக, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, முதன்மைச் செயலாளராக, இப்படி 40 ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கக் கூடியவர் நம்முடைய நேரு அவர்கள். பதவிகளை என்றைக்கும் தேடிப் போனது கிடையாது. அவரைத் தேடித்தான் பதவிகள் வந்திருக்கின்றன. அதுதான் உண்மை. விரைவில் திருச்சி கிழக்கிலே இடைத்தேர்தல் வரப்போகிறது. ஆறு மாத காலமாகத் தமிழ்நாட்டிலே ஓர் ஆட்சி நடந்து
கொண்டிருக்கிறது. மன்னிக்கவும், ஆட்சி என்று சொல்லக் கூடாது. அது ஒரு காட்சியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. மாற்றம், மாற்றம் என்று சொன்னார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையிலே மிகப்பெரிய ஏமாற்றம்தான் உருவாகியிருக்கிறது. திரையிலே கதாநாயகனாக நடித்து, இன்றைக்கு நிஜத்திலே ஒரு வில்லனாக உலா வந்து கொண்டிருப்பவர்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டுடைய முதலமைச்சராக இருக்கிறார்.
பாலியல் கொடுமைகளுக்கெல்லாம் காரணமாக இருக்கக் கூடியவர்கள் யார் என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில்கூட செய்திகளில் பார்த்திருக்கலாம். காரமடை பகுதியிலே ஒன்றியச் செயலாளர்
தலைமறைவாகியிருக்கிறார். ஆக, இன்றைக்கு இருக்கக்கூடிய தவெக கட்சிக்குப் பெயரை மாற்றிக்கூட அவர்களுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னால், அந்தக் கட்சிக்கு ‘பாலியல் சுரண்டல் கழகம்’ என்றுதான் பெயரை வைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகும்.
இதற்கெல்லாம் முடிவுகட்ட விரைவில் ஒரு நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நாம் இப்பொழுதே தயாராக இருக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும்
முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Comments are closed.