Rock Fort Times
Online News

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி நிஷாந்த் சிக்கினார்… தர்மபுரியில் பதுங்கி இருந்த போது சுற்றி வளைத்த போலீசார்!

மதுரை பழங்காநத்தம்- காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் தனிஷ்க் நகைக்கடையின் புதிய ஷோரும் உள்ளது. இந்த நகைக்கடைக்குள் கடந்த 12-ம் தேதி அதிகாலை புகுந்த வாலிபர், கடையில் இருந்து ரூ. 21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றார். இந்த கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உடல் முழுவதும் கருப்பு துணியை சுற்றிக்கொண்டு தனி ஒருவனாக முகமூடி, கையுறை அணிந்தவாறு வந்து நகைகளை கொள்ளையடித்த அந்த நபர். பழங்காநத்தம் அருட்பெரும் ஜோதி தெருவை சேர்ந்த சுரேஷ் மகனான யூடியூபர் நிஷாந்த் (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும், இந்த கொள்ளையில் நிஷாந்தின் காதலியும், மதுரையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி (23) என்பவருக்கும், நிஷாந்தின் தந்தை சுரேஷ்-க்கும் (50) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மீனாட்சி, சுரேசை போலீசார் கைது செய்தனர். மேலும், மதுரை மாடக்குளம் கண்மாய் கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ தங்க, வைர நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருந்த நிஷாந்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மதுரை நகைக்கடை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான நிஷாந்தை போலீசார் இன்று(16-11-2026) கைது செய்தனர். 5 நாட்களாக தலைமறைவாக இருந்த நிஷாந்தை போலீசார் இன்று கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் சேத்தம்பட்டியில் பதுங்கி இருந்த நிஷாந்தை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிஷாந்தை மதுரைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 6 கிலோ வரை மீட்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளதால் எஞ்சிய நகைகளும் மீட்கப்படும் என்று தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்