Rock Fort Times
Online News

தமிழகத்தில் கொலை, கொள்ளை, லாக்கப் மரணங்கள் அதிகரிப்பு… * த.வெ.க. அரசை விளாசிய இ.பி.எஸ்., உதயநிதி..!

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், காவல் நிலையத்திலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அதிர்ச்சி அளிக்கின்ற செய்தி வந்துள்ளது. ஒருபுறம் செஞ்சி சிறுமியை இன்னும் “தாய்மாமா” அரசின் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. மறுபுறம், மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை முதல் காஞ்சிபுரம் டாஸ்மாக் பணக் கொள்ளை வரை இன்னும் பல கொள்ளைக் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தவெக அரசு. இதே சினிமாவாக இருந்திருந்தால், குற்றவாளிகளை பாலத்தில் கட்டித் தொங்கவிட்டு ‘மாஸ் பிஜிஎம்’ போட்டிருப்பார். கனவு உலகத்தைக் கண்டு ஆட்சியைக் கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்த தவெக கட்சிக்கு வாக்களித்த மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். காவல் நிலையத்தில் ஒருவர் உயிரை மாய்த்துகொள்ளும் அளவிற்கு இந்த ஆட்சியின் காவல்துறை மெத்தனமாக இருந்திருக்கிறது என்பது வெட்கத்திற்குரியது. நேற்றைய தினம் இதேபோல் பண்ருட்டி பகுதி காவல் நிலையத்தில் ஒரு பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது உள்ளிட்ட தொடர் செய்திகள் முதல்வர் காதுகளுக்கு எட்டுகிறதா? காவல் நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் :

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? அவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்