Rock Fort Times
Online News

ரூ.1600 கோடிக்கு கைமாறிய அடையாறு ஆனந்த பவன்: கையகப்படுத்திய போதி ட்ரீ சிஸ்டம்ஸ்!

தமிழகத்தில் ரெஸ்டாரண்ட் துறையில் முக்கிய அடையாளமாகவும், தென்னிந்தியாவின் மிகப்பிரபலமான சைவ உணவகம் மற்றும் இனிப்பு வகை விற்பனை நிறுவனமாகவும் திகழும் அடையாறு ஆனந்த பவன் (A2B), தனது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்துள்ளது. சுமார் 180 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1,690 கோடிக்கு இந்தப் பங்கு விற்பனை ஒப்பந்தம் நடைபெற்றுள்ளதாகத் கூறப்படுகிறது. ஜேம்ஸ் மர்டோ மற்றும் உதய் சங்கர் ஆகியோரால் வழிநடத்தப்படும் போதி ட்ரீ சிஸ்டம்ஸ் (Bodhi Tree Systems) நிறுவனம், அடையாறு ஆனந்த பவனின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியைத் தொழில்முறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்ல போதி ட்ரீ திட்டமிட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் இயக்குநர் குழுத் தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் அடையாறு ஆனந்த பவனின் நிர்வாகக் கட்டமைப்பிலும் எதிர்காலச் செயல்பாடுகளிலும் புதிய மாற்றங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறு ஆனந்த பவனை இந்தியா முழுவதும் மேலும் விரிவுபடுத்துவதே புதிய நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. தற்போது செயல்பட்டு வரும் உணவகக் கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், வெளிநாடுகளிலும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் இனிப்புகளுக்கு சர்வதேச அளவில் சந்தையை உருவாக்கி, ஏ2பி நிறுவனத்தை உலகளாவிய இந்திய உணவக பிராண்டாக வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆனந்த பவன் நிறுவனம் தற்போது இந்தியாவில் சுமார் 160 கிளைகளையும், வெளிநாடுகளில் 30-க்கும் மேற்பட்ட கிளைகளையும் நடத்தி வருகிறது. இதன்மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து 190-க்கும் மேற்பட்ட உணவகக் கிளைகளுடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்