ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா… மாயாண்டி குடும்பத்தார் மணிவண்ணனாக மாறிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் * திருச்சி மாவட்ட த.வெ.கவினர் குஷியோ குஷி…
தமிழகத்தில் த.வெ.க ஆளுங்கட்சியான பிறகு, சொந்த கட்சியினரை விட அரசியல் ஆதாயத்திற்காக அணி மாறி ஐக்கியமான மாற்றுக்கட்சியினரே அதிகமாக பலனடைந்து வருகின்றனர். திரைப்பட நடிகராக விஜய் இருந்த தொடக்க காலத்திலிருந்து அவர் கூடவே பயணிக்கும் உண்மையான த.வெ.கவினர் அரசியல் ஆட்டத்தின் தலை, கால் புரியாமல் இன்னும் குழப்பமான மனநிலையிலேயே இருந்து வருகின்றனர். கூடுதலாக தற்போது நாலாப்புறத்திலிருந்தும் ஆளுங்கட்சிக்கு எதிராக பரப்பப்படும் அனல் காற்று மற்ற மாவட்டத்தினரைப் போல் திருச்சி மாவட்ட த.வெ.க. வினரையும் குழப்பத்திலேயே வைத்திருந்தது. ஆனால் அந்த பொலிட்டிக்கல் ஹீட் அத்தனையும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் திடீர் திருச்சி விசிட்டால் தணிந்திருக்கிறது. தான் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர், ஆளுங்கட்சியின் அமைச்சர் என்பதையெல்லாம் ஓரமாக தள்ளி வைத்துவிட்டு, காலையிலிருந்து இரவு வரை தொண்டர்களோடு தொண்டராக அனைவரிடமும் புஸ்ஸி ஆனந்த் இயல்பாக பழகி இருக்கிறார். இதனால் திருச்சி மாவட்ட த.வெ.கவினர் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போய் இருக்கின்றனர். திருச்சி கோர்ட் யார்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஜல்ஜீவன் 2.0 கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஆனந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்திருக்கிறார். தொடர்ந்து முக்கொம்பு கதவணை ஆய்வு, ஜல்ஜீவன் நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் நிர்வாகிகள் ஒவ்வொருவராக சந்தித்து தங்கள் தொகுதி பிரச்சனைகள், அரசியல் நிலவரம் ஆகியவற்றை விரிவாக பேசியிருக்கிறார். எல்லோரும் எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள். மாற்று அரசியல் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு ஒவ்வொருவரின் குடும்பமும் முக்கியம்.
ஆகவே, குடும்பத்தையும், தொழிலையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். தலைவர் விஜயை நம்பி பயணிக்கும் உண்மையான கட்சித் தொண்டர்களை முதல்வர் எப்போதும் கைவிட மாட்டார். நம்பிக்கையுடன் களப்பணியாற்றுங்கள் என நம்பிக்கையளித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்த அவர், கோவில் வளாகத்திலேயே பக்தர்களோடு பக்தராக தரையில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறியிருக்கிறார். தொடர்ந்து கோவில் பிரசாதத்தை எல்லோருக்கும் பிரித்துக்கொடுத்து தானும் சாப்பிட்டிருக்கிறார்.இப்படி நாள் முழுவதும் யதார்த்த குணம் மாறாமல் புஸ்ஸி ஆனந்த் இயல்பாக பழகிய விதம் கட்சியினருக்கு ஆனந்தத்தை கொடுத்துள்ளது.

Comments are closed.