தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், ஆளுங்கட்சி அமைச்சரவையில் முக்கிய மந்திரியாகவும் இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். இவர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி நேற்றைய தினம் திருச்சி வந்துள்ளார். திருச்சி கோர்ட்யார்ட் மேரியாட்டில் நடைபெற்ற ஜல்ஜீவன் 2.0 கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஆனந்த் வந்திருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், நேற்று காலை சென்னையிலிருந்து திருச்சி வந்த அவர் நிகழ்ச்சி முடிந்தும் இரவு வரை திருச்சியிலேயே முகாமிட்டிருக்கிறார். வழக்கமாக கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் திருச்சி வருவது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் சொல்லப்பட்டிருக்கும் . ஆனால், நேற்றைய தினம் அமைச்சர் ஆனந்த் வந்தது மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவன், திருச்சி மாநகர த.வெ.க பிரமுகர்கள் தர்கா சௌகத், குடமுருட்டி கரிகாலன் போன்ற சிலரைத்தவிர வேறு யாருக்கும் கடைசி நிமிடம் வரை தெரியவில்லை. இதனால் திருவெறும்பூர் எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி, முசிறி எம்.எல்.ஏ விக்னேஷ் ஆகியோர் நேற்று வரவே இல்லை. திருச்சி வந்ததும் நேரடியாக முக்கொம்பு கல்லணையில் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு நடத்தியிருக்கிறார். பிறகு தனியார் விடுதியில் நடைபெற்ற ஜல்ஜீவன் திட்ட கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்திருக்கிறார். அப்போது ஒவ்வொருவரிடமும் தொகுதி நிலவரம், அரசியல் சூழ்நிலை குறித்து கேட்டறிந்திருக்கிறார். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 தொகுதிகளில், திருச்சி கிழக்கு தவிர்த்து மீதியுள்ள 4 தொகுதிகளிலும் த.வெ.க.விற்கு ஆதரவான சூழலே நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், திருச்சி கிழக்கில் த.வெ.க வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆகவே வேட்பாளர் தேர்வு குறித்தும் திருச்சி மாநகர த.வெ.கவினரிடம் விவாதித்திருக்கிறார். மதியத்திற்கு பிறகு, இரவு சென்னை கிளம்பும் வரை ரிலாக்ஸ் மோடில் இருந்த பொதுச்செயலாளர் ஆனந்திடம் த.வெ.கவினர் தங்கள் உள்ளக்குமுறலையும் கொட்டித் தீர்த்திருக்கின்றனர்.
குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி அரசியல், திருச்சி டவுன்ஹால் தரைக்கடை வியாபாரிகளிடம் தீபாவளி சமயத்தில் செய்யப்பட்ட அநியாய வசூல், அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பின்மைஆகியவை குறித்து பேசப்பட்டிருக்கின்றன. திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட த.வெ.க மாவட்ட செயலாளரான எம்.எஸ்.விக்னேஷின் சமீபத்திய செயல்பாடுகள் மட்டும் பொதுச்செயலாளர் ஆனந்த்திற்கு அதிருப்தியை தந்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, அவரை மட்டும் தனியாக அழைத்து வார்னிங் செய்திருக்கிறார். பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு சென்னை கிளம்பி சென்றிருக்கிறார். பொதுச்செயலாளருடன் ஒருநாள் முழுவதும் உடனிருக்கும் வாய்ப்பும், தங்களது நிறைகுறைகளை மனம் விட்டு பேசுவதற்கான சந்தர்ப்பமும் கிடைத்ததால் ஆரம்பத்திலிருந்து உடன் பயணிக்கும் திருச்சி மாவட்ட த.வெ.கவினர் சந்தோஷத்தில் திளைத்து வருகின்றனர். அதே சமயத்தில், மாற்றுக்
கட்சியிலிருந்து த.வெ.கவிற்கு அணி தாவி, தற்போது அக்கட்சி தொண்டர்களையே ஆட்டிப்படைக்கும் “கறை படிந்த” கரை வேஷ்டியினர் அமைச்சர் ஆனந்தின் திடீர் திருச்சி விசிட்டால் அடுத்தது என்ன நடக்கும் என்பது தெரியாமல் அலறிப்போய் உள்ளனர்.

Comments are closed.