Rock Fort Times
Online News

அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்: மாணவர்களுக்கு ‘கேக்’ வழங்கிய முதல்வர் விஜய்…!

முன்னாள் பாரத பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வார். இதன் காரணமாக குழந்தைகள் அவரை நேரு மாமா… என்றே அழைத்து வருகின்றனர். நேருவின் பிறந்தநாள் ஆண்டு தோறும் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (14- 11- 2026) ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் ஆகும். இந்நாளில் சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கப்படுவது வழக்கம். முதல் முறையாக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு நேரு பிறந்த நாளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி, நேரு பிறந்தநாள் நாளை சனிக்கிழமை விடுமுறை நாளில் வருவதால் இன்றைய தினமே வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் என மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 பயனாளிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

அதன்படி சென்னை, கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் முதல்வர் விஜய், மாணவ மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்