கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய ஊழலைக் கண்டுபிடித்ததால் என் மீது அவதூறு பரப்பப்படுகிறது… * த.வெ.க.எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்!
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டை தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக கள்ளக்குறிச்சியில் இன்று(10-11-2026) செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“மாவட்ட பெண் ஆட்சியருக்கு அவதூறான குறுஞ்செய்தி அனுப்பியதாக என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார்கள். அதிகாரிகள் மீது எனக்கு எப்போதும் பெரிய மதிப்பும், மரியாதையும் உண்டு. அப்படிப்பட்ட எந்தத் தவறும் நான் செய்யவில்லை; என் மீதும் கட்சி மீதும் களங்கம் கற்பிக்கவே எதிர்க்கட்சியினர் இந்த அவதூறை பரப்புகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் த.வெ.க-வில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ.நான் மட்டும்தான் என்பதால் என் மீது வன்மம் அதிகமாக உள்ளது. நகரின் மையப்பகுதியில் இருந்து 5 கி.மீ தள்ளி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அந்த இடம் முழுவதையும் பிளாட் போட்டு விற்கும் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இந்தத் ஊழலைக் கண்டுபிடித்து முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்றதால்தான், என்னைச் சமூக வலைதளங்களில் டேமேஜ் செய்ய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கேவலமான பொய்களைப் பரப்பி வருகிறார்கள்” என்றார். அமைச்சர் ராஜ்மோகன், மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் சட்டமன்ற உறுப்பினர் என்றுகூடப் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. உண்மையிலேயே தவறு நடந்திருந்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கட்டும், நான் பயப்பட மாட்டேன். எங்களுடைய முதலமைச்சர் ஸ்டைலிலேயே நானும் சொல்கிறேன். எதிர்மறைத் தகவல்களைப் புறக்கணிப்போம் (Ignore the negativity). இதுகுறித்து ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்; உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இப்போதும்கூட நான் மக்களுக்காக களத்தில் இறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். மக்கள் எங்கள் கூடவே இருக்கிறார்கள், அவர்கள்தான் எங்கள் உண்மையான சக்தி. தவெக ஆட்சியில் இதுபோன்ற தவறுகளுக்கே இடமில்லை; வன்மத்துடன் பரப்பப்படும் இந்த ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ வேலைகளைப் பற்றிக் கவலைப்படாமல் எனது மக்கள் பணியைத் தொடர்ந்து செய்வேன்” என்று எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கூறினார்.

Comments are closed.