Rock Fort Times
Online News

பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கிய விவகாரம்: லஞ்ச ஒழிப்புத்துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார்…

கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாரளித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக நூலகம், கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டமாகும். இதற்கான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், த.வெ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இதற்கான பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து கடந்த மாதம் முதலமைச்சர் விஜய், பெரியார் அறிவுலக நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கொள்முதலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதம், பதிப்பகங்களின் தேர்வு மற்றும் வாங்கப்பட்ட புத்தகங்களின் தரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் ராஜ்மோகன், பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்