மதுரை மாவட்டம், மேலூர் அருகே தனியாமங்கலத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் – சந்தியா தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துச்செல்வம் என்ற ஆண் குழந்தை. இந்நிலையில், பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தனியாமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டில் குழந்தைகளுடன் சந்தியா வசித்து வந்தார். இந்நிலையில், சிறுவன் முத்துச்செல்வம் தனியாமங்கலம் அருகே வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரும் நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் விளையாட செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளான். மாலை வரை சிறுவன் வீடு திரும்பாததால், சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் காவல்துறை உதவியுடன் அப்பகுதி முழுவதும் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 26 ) 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், அதேபகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தான். இதனை அடுத்து காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதுகுறித்து, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாயமான சிறுவன் இன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.