Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு உட்பட 5 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக… * முன்னாள் அமைச்சர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. இந்த இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் வாகை சூடி உள்ளது. மீதமுள்ள கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு என 5 சட்டமன்ற தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 5 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(24-10-2026) சென்னை அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார். திருச்சி கிழக்கு தொகுதிக்காக திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அன்பில் மகேஷ் போன்றோருடனும், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டி, பெருந்துறை தொகுதிக்கு முத்துசாமி. கரூர் சட்டமன்ற தொகுதிக்கு செந்தில் பாலாஜி, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு ஆவுடையப்பன் போன்ற நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின்போது, 5 தொகுதிகளிலும் கட்சிக்காக உழைத்தவர்களின் பெயர்களையும், தொகுதிக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர்களின் பெயர்களை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் கூட்டணிக் கட்சிகள் இன்றி தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்றும், அதற்கேற்றவாறு தயாராக வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்திய தாகவும், கொங்கு மண்டலத்தில் இருக்கும் தொகுதியான பெருந்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனவும் ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்