பலத்த மழை பெய்து வருவதால் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் 2 நாட்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தல்…!
நீலகிரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் 2 நாட்களுக்கு உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த ஒரு வார காலமாக பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கொடைக்கானல் மற்றும் உதகையிலும் பலத்த மழை கொட்டியதால், மலைப் பாதையில் பல இடங்களில் மழைநீர், நீர்வீழ்ச்சி போல ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால், மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதகை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவுறுத்தலில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், இன்றும்,( அக்டோபர் 24) நாளையும்( அக்டோபர் 25) உதகை வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேத்ரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மக்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கொடைக்கானல்
இதேபோல கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா வருவதை பயணிகள் தவிர்க்க வேண்டும். மலைப்பாதைகளில் பயணிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments are closed.