Rock Fort Times
Online News

மணப்பாறை மாட்டுச்சந்தையை கைப்பற்றுவதில் போட்டா போட்டி…* ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட ஆயத்தம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் செயல்பட்டு வரும் மாட்டுச்சந்தை தமிழக அளவில் மிகப்பிரபலம் வாய்ந்தது. இங்கு, திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை விற்க மற்றும் வாங்க வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமூகமாக சென்று கொண்டிருந்த மாட்டுச்சந்தை நிர்வாகத்தில், சில மாதங்களாக பயங்கர சர்ச்சைகள் வெடித்தது. கடந்த வருடம், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் மணப்பாறை மாட்டுச்சந்தையை குத்தகைக்கு எடுத்து, அதை உள்ளூரை சேர்ந்த ஒருவருக்கு கை மாற்றி விட்டதாகத் தெரிகிறது. அந்த உள்ளூர் பிரமுகர், ஒவ்வொரு வாரமும் மாட்டுச்சந்தை நடைபெறும் போது மாடுகளை விற்க மற்றும் வாங்க வரும் வெளியூரை சேர்ந்தவர்களை டார்கெட் செய்து குண்டர் படையை வைத்து மிரட்டி ஒரு மாட்டிற்கு ரூ.400 முதல் ரூ.750 வரை கட்டாய வசூல் செய்வதாகவும், அதேபோல மணப்பாறை மாட்டுச்சந்தையிலிருந்து மாடுகளை ஏற்றிசெல்லும் ஒவ்வொரு லாரிக்கும் தலா ரூ.15,000 வரை கட்டாய வசூல் செய்வதாகவும், ஆளுங்கட்சியான த.வெ.க பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, மணப்பாறை தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏ கதிரவன் இவ்விவகாரம் குறித்து நகராட்சி ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அதன்படி நகராட்சி ஆணையர், மாட்டுச்சந்தை குத்தகை உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இதையடுத்து, இவ்விவகாரம் திருச்சி மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு செல்லவே, அதிகாரிகளிடம் முறையான விசாரணை நடத்தி, மணப்பாறை மாட்டுச்சந்தையை குத்தகை எடுத்தவரின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, மாட்டுச்சந்தை முழுவதும் மணப்பாறை நகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் நடைபெறவும் உத்தரவிட்டார். இந்நிலையில், கடந்த மாதம் செப்டம்பர் 21ம் தேதி மாட்டுச்சந்தையை
குத்தகை எடுப்பது தொடர்பான ஏலக்கூட்டம் நடைபெற்றது. 7 பேர் கலந்துகொண்ட ஏலக்கூட்டத்தில் ரூ.3.16 கோடிக்கு மாயழகு என்பவர் மாட்டுச்சந்தையை ஏலம் எடுத்துள்ளார்.

ஆனால், இதற்கடுத்து நடைபெற்ற மாட்டுச்சந்தை தீர்மான நிறைவேற்றக் கூட்டத்தில் மணப்பாறை நகராட்சி கவுன்சிலர்கள் சிலர் செப்டம்பர் 21ம்தேதி ரூ.3.16 கோடி ரூபாய்க்கு மாட்டுச்சந்தை குத்தகை எடுத்தது தொடர்பான தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டனர். இதையடுத்து இத்தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டு,தொடர்ந்து மாட்டுச்சந்தை நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இம்முறை மாட்டுச்சந்தையை ஏலம் எடுத்திருந்த மாயழகு என்பவர்,மாட்டுச்சந்தை குத்தகை உரிமையை தனக்கு வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும்
கூறி 4 பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இவை அனைத்தையும் ஒரே வழக்காக விசாரித்த நீதிபதிகள், இம்முறை ஏலம் எடுத்த மாயழகு என்பவருக்கே குத்தகை உரிமத்தை ஒருவார காலத்திற்குள் வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மணப்பாறை மாட்டுச்சந்தையை கைப்பற்ற நினைக்கும் எதிர்தரப்பு, ஹை கோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், வருகிற திங்கட்கிழமை இவ்வழக்கு கோர்ட்டில் ஃபைல் செய்யப் போவதாகவும், அதுவரை மாட்டுச்சந்தை குத்தகை உரிமத்தை வேறு யாருக்கும் வழங்கக்கூடாது எனவும் மணப்பாறை நகராட்சி ஆணையரை நெருக்கடி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்விவகாரம் தற்போது மணப்பாறை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் தகிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்