Rock Fort Times
Online News

விமான எரிபொருள் மீதான வரியை குறைத்தது தமிழக அரசு…* விமான கட்டணம் வெகுவாக குறையும்..!

தமிழகத்தில் விமான எரிபொருள் மீதான, ‘வாட்’ எனப்படும் மதிப்பு கூட்டு வரி, 29 சதவீதமாக உள்ளது. இது, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அதிகம். விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் மொத்த செயல்பாட்டு செலவில் எரிபொருளின் பங்கு, 50 சதவீதம் வரை உள்ளது. வரி அதிகம் இருப்பதால், விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதுடன், தமிழக நகரங்களுக்கு புதிய விமான சேவைகளை தொடங்க நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. விமான எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு தமிழக அரசுக்கு விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. விமானங்களுக்கு விற்கப்படும் விமான எரிபொருள் மீதான, மதிப்பு கூட்டு வரியை குறைத்து, தமிழக அரசின் வணிக வரித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. சென்னையில் எரிபொருள் நிரப்பும் விமானங்களுக்கு விற்கப்படும் விமான எரிபொருள் மீதான வரி, 29 சதவீதத்தில் இருந்து, 16 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. சென்னையை தவிர, கோவை, மதுரை உட்பட, தமிழகத்தின் பிற விமான நிலையங்களில், எரிபொருள் நிரப்பும் விமானங்களுக்கு விற்கப்படும் எரிபொருள் மீதான வரி, 29 சதவீதத்தில் இருந்து, ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.மேலும், 40,000 கிலோவுக்கு குறைவான எடை உடைய சிறிய விமானங்கள், சென்னை தவிர, தமிழகத்தின் பிற விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கான வரி, 5 சதவீதத்தில் இருந்து, ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு, வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்து, 2027 அக்., 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். எண்ணெய் நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும், விமான நிறுவனங்களிடம் இருந்து, விமான பயணம் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிவிப்பு படிவத்தை வாங்கி, மாதாந்திர வரி அறிக்கையுடன் மதிப்பீட்டு அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வரி குறைப்பால், தமிழகத்தில் விமான டிக்கெட் விலைகுறையவும், விமான போக்குவரத்து சேவை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்