மத்திய தொழில் பாதுகாப்புப் படை(சி.ஐ.எஸ்.எஃப்) கட்டமைப்பில் மறு சீரமைப்பு…* நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது..!
சி.ஐ.எஸ்.எஃப் (CISF) என்ற மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும். இதன் வீரர்கள் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் சி.ஐ.எஸ்.எஃப் தனது நிர்வாக மற்றும் செயல்பாட்டு கட்டமைப்பு முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மறுசீரமைப்பை (Restructuring) மேற்கொண்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) ஒப்புதலுடன் இந்த புதிய கட்டமைப்பு 2026 நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. முன்பு பிராந்திய அடிப்படையில் (Territorial Supervision) இயங்கி வந்த பாதுகாப்பு முறை மாற்றப்பட்டு, தற்போது குறிப்பிட்ட துறை சார்ந்த செயல்பாட்டு கட்டளைகளாக (Sector-based Functional Commands) மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிய மறுசீரமைப்பின் கீழ், ஒரே மாதிரியான பொருளாதார அல்லது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள், அவை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒரே செயல்பாட்டுக் கட்டளையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தொழில் மற்றும் எரிசக்தி பிரிவுகள், தொழில்நுட்பத் திறன் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த நிலக்கரி (ராஞ்சி), எஃகு (பிலாய்), பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு கவுகாத்தி மற்றும் மின்சாரம் (புது தில்லி & கொல்கத்தா) ஆகிய துறைகளுக்குத் தனித்தனி பாதுகாப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடல்சார் வர்த்தக உள்கட்டமைப்பைப் பாதுகாக்க, முந்தைய மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் தற்பொழுது மேற்கு கடற்கரை துறைமுக பிரிவு (மும்பை) மற்றும் கிழக்கு கடற்கரை துறைமுக பிரிவு (சென்னை) என மாற்றப்பட்டுள்ளன. 250 பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் பாதுகாப்பு இதன் கீழ் வரும். தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பிரிவு மாற்றியமைக்கப்பட்டு, அரசு கட்டிடங்கள், அருங்காட்சியகங்கள் & நினைவுச் சின்னங்கள் மற்றும் விரைவுப் போக்குவரத்து அமைப்பு பிரிவு என ஒரே நகர்ப்புற பாதுகாப்பு கட்டமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த பிரிவுகளான விமானப் போக்குவரத்து, அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித் துறை ஆகியவற்றின் தற்போதைய செயல்பாட்டு கட்டமைப்புகளில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடரும்.
மறுசீரமைப்பின் நோக்கங்கள்,
- வெவ்வேறு தொழில் அமைப்புகளுக்கு தேவையான பிரத்யேக பாதுகாப்பு நெறிமுறைகளை துல்லியமாக வடிவமைத்தல்.
- புவியியல் ரீதியாகப் பிரிந்திருந்தாலும், ஒரே துறையைச் சேர்ந்த நிறுவனங்களைக் கூட்டுக்கட்டளையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல்.
- துறைமுக வசதிகளுக்கான சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு குறியீட்டின் கீழ், CISF ஒரு “அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பாக” (RSO) நியமிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.