Rock Fort Times
Online News

திருச்சியில் போலி லாட்டரி சீட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பல் சுற்றி வளைப்பு…* வழக்கறிஞர் உள்பட 3 பேர் கைது!

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அருகில் உள்ள கேரளத்தில் அந்த மாநில அரசால்
லாட்டரி சீட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கேரள மாநில லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சடித்து கள்ளத்தனமாக தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர். சிலர் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளையும் நடத்தி ‘கல்லா’ கட்டி வருவதாகவும், அவ்வாறான லாட்டரி சீட்டுகள் திருச்சியில் போலியாக அச்சடிக்கப்பட்டு வருவதாகவும் திருச்சி போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சி மாவட்ட எஸ்.பி.உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருச்சி, சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குணசேகரன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருச்சி, உய்யக் கொண்டான் திருமலை சண்முகா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், சண்முகா நகர் 15வது கிராஸ் பகுதியில் உள்ள அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த வீட்டின் உள்ளே சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டுக்குள் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் போலியாக அச்சடித்து விநியோகம் செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அங்கிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் லேப்டாப், ஜெராக்ஸ் மிஷின், செல்போன்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 450 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கிருந்த 3 நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் உய்யக் கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தமிழரசன் (41), கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, நங்கவரம் ஆசாரி தெருவை சேர்ந்த வழக்கறிஞர் மீரான் (42), குளித்தலை தாலுக்கா, நெய்தலூர் அருகே உள்ள களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (42) என்பது தெரிய வந்தது. மேற்கண்ட மூன்று பேரும் சேர்ந்து கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை போலியாக திருச்சியில் அச்சடித்து திருச்சி, கரூர், பெரம்பலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாட்டரி சீட்டு கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை திருச்சி மத்திய மண்டல ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்