திருச்சி விமான நிலையத்தில் ரூ.64 லட்சம் மதிப்பிலான தங்கம், வெளிநாட்டுப் பணம் பறிமுதல்… * 4 பயணிகளிடம் விசாரணை!
இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று (அக். 15) திருச்சி வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரண்டு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்கள் தங்களது உடலில் மறைத்து கடத்தி வந்த 250.2 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.36.89 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த அக். 13ம் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு விமானம் மூலம் செல்லவிருந்த இரண்டு பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர்களது கைப்பைகளில் 100 அமெரிக்க டாலர் மதிப்புள்ள 213 பணத்தாள்கள் மற்றும் 500 சவுதி ரியால் மதிப்புள்ள 60 பணத்தாள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இவற்றின் இந்திய மதிப்பு ரூ.27.56 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பணத்தைச் சட்டப்பூர்வமாக வைத்திருப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால், அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களிலும் மொத்தம் ரூ.64.45 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.