திருச்சி மாவட்டம், துறையூர், பச்சமலைக்கு ஒரு மாதத்தில் சாலை வசதி…* துணை சபாநாயகர் மு.ரவிசங்கர் உறுதி..!
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமானது துறையூர். இத்தொகுதியில் அமைந்துள்ள பச்சமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் சாலை வசதி மோசமாக இருப்பதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சாலையை சீரமைத்து தர வலியுறுத்தியும் பச்சமலைப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் (அக்டோபர் 14) திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இப்போராட்டத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பச்சமலையில் பள்ளிக்கூடம் அமைப்பது, தேசியமயமாக்கப்பட்ட வங்கியை நிறுவுவது, விபத்து மற்றும் அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல வசதியாக 108 ஆம்புலன்ஸ் ஒன்றை இப்பகுதிக்கென ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவே இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து துறையூர் தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக துணை சபாநாயகருமான மு.ரவிசங்கரிடம் நாம் பேசினோம். அப்போது அவர் தெரிவித்ததாவது.,” துறையூர் தொகுதிக்குட்பட்ட பச்சமலைப்பகுதி மக்களின் வலியும், வேதனையும் நன்கு அறிந்தவன் நான். இன்றல்ல நேற்றல்ல சுமார் 60 ஆண்டுகாலமாக இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தேவையான பள்ளிக்கூடம், ஏடிஎம், பேங்க், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 108 ஆம்புலன்ஸ் வசதி, தரமான தார்சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஒவ்வொன்றாக சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். ஏற்கெனவே இதுகுறித்து நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 3 முறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். பச்சமலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புதிய சாலை அமைப்பது தொடர்பாக ஏற்கெனவே மாவட்ட வன அலுவலரிடம் பேசியுள்ளேன். விரிவான திட்ட அறிக்கையும் தயாராக உள்ளது. மேலும் வனத்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து ஆய்வுக்கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. எனவே, அதிகபட்சமாக இன்னும் ஒரு மாதத்திற்குள் பச்சமலைக்கு புதிய சாலையை அமைத்துக் கொடுப்பதற்கான வேலையில் ஈடுபடுவேன். இதுமட்டுமல்லாமல் பச்சமலையில் இருவழிப்பாதை கொண்ட அகலமான சாலை அமைப்பது, ரோப் கார் வசதி ஏற்படுத்துவது, விவசாய தொழிலை ஊக்குவித்து மதிப்புக்கூட்டு பொருட்களை விற்பதற்கான விற்பனை நிலையங்கள் அமைப்பது போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பச்சமலையை சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான அத்தனை செயல்களிலும் ஈடுபடுவேன். மண்ணச்சநல்லூர் அருகே சாதாரண கிராமத்தில் பிறந்த என்னை, நான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற வைத்த துறையூர் தொகுதி மக்களுக்கு என்றும் உண்மையுடன் பாடுபடுவேன்” என்றார்.

Comments are closed.