இன்றைய நவநாகரீக உலகில் ‘ரீல்ஸ்’ மோகம் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இதற்கு மருத்துவமனைகளும் தப்பவில்லை. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள் மற்றும் கோவில்களில் ரீல்ஸ்’ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . தற்போது மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்கள் ரீல்ஸ்’ எடுத்து வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நோயாளிகளின் கருத்துக்களை உருவாக்குவதோ, விளம்பர ரீதியான வீடியோக்களை உருவாக்குவதோ கூடாது. நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள், சிகிச்சை முறைகள் குறித்து ஏஐயால் உருவாக்கப்பட்ட விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. பணம் கொடுத்து கூகுள் தேடுதலில் முதன்மை மருத்துவமனையாக காண்பிக்கவும், தரவரிசைகளைக் கையாளுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. நோயாளிகளை ஈர்ப்பதற்காக இன்ப்ளுயன்ஸர்களையோ, விளம்பர நிறுவனங்களையோ பயன்படுத்தி ரீல்ஸ் எடுக்க தடை செய்யப்படுகிறது. இருப்பினும், விளம்பரமில்லாத மற்றும் சுகாதாரக் கல்வி குறித்து விழிப்புணர்வுக்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்த மருத்துவர்களுக்கு அனுமதி உண்டு. இரு முறை இந்த தடைகளை மீறும் மருத்துவர்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை மீறினால், 3 முதல் 6 மாதத்திற்கு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். தொடர்ந்து விதிகளை மீறினால், மருத்துவப் பதிவேட்டில் இருந்து 3 ஆண்டு வரை பெயர் நீக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.