Rock Fort Times
Online News

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை… காற்றில் பறக்கும் திருச்சி ‘மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ்’ மானம்… * கடையை சீல் வைத்து உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தல்..!

ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் நெருங்கி விட்டதால் ஒவ்வொரு ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி கடைகளிலும் தற்போதே வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு லாப வெறியோடு செயல்படும் திருச்சி, ‘மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ்’ போன்ற நிறுவனங்கள் காலாவதியான உணவுப் பொருட்களை பொதுமக்கள் தலையில் கட்டி கல்லா கட்டும் வேலையை கச்சிதமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. அப்படியொரு சம்பவம்தான் திருச்சியில் அரங்கேறியுள்ளது. சிலநாட்களுக்கு முன்பு ( அக்டோபர் 6-ம் தேதி இரவு 9 மணிக்கு ) திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார், திருச்சி தில்லைநகர் 7வது கிராஸில் உள்ள மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ்க்கு சொந்தமான அரசன் ஸ்வீட்ஸ்க்கு சென்று பேக்கரி பொருட்களை வாங்கியுள்ளார். அதை மறுநாள் சாப்பிடுவதற்காக பார்த்தபோது, அதில் முறையான தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி எதையும் குறிப்பிடாமல் அந்த இடங்களில் ஜீரோ ஜீரோ என அச்சடிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக தயாரித்ததிலிருந்து அதிகபட்சமாக 4 நாட்களில் பேக்கரி பொருட்கள் கெட்டுப்போய் விடும் என்பதால், உடனடியாக அவர் தில்லைநகர் அரசன் ஸ்வீட்ஸில் இதுகுறித்து விளக்கம் கேட்டதோடு, அங்கு விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புதிய பேக்கரி பொருட்களிலும் காலாவதி தேதியை சரி பார்த்துள்ளார். அப்போது அதிலும் தயாரிப்பு தேதிக்குப்பதில் வாடிக்கையாளர்களை குழப்பும் விதத்தில் “ஜீரோ ஜீரோ” என்றே பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஆகவே இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோவை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் கராத்தே முத்துக்குமார் பதிவிட்டுள்ளார். அவை தற்போது வைரலாக பரவி வருகின்றன. இதை பார்க்கும் நெட்டிசன்ஸ்களும் மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ் லட்சணத்தை கமெண்ட் பாக்ஸ்களில் கழுவிக்கழுவி ஊற்றிக்கொண்டிருக்கின்றனர். மாம்பழ சீசன் வந்தாலே காந்தி மார்க்கெட் பழ வியாபாரிகளை சோதனை என்கிற பெயரில் கசக்கி பிழிவதிலும், குட்கா, பான் மசாலா பொருட்களை விற்பனை
செய்பவர்களிடமும் கறார் காட்டும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்கள் வயிற்றில் அடிக்கும் மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ் போன்ற நிர்வாகத்தில் மறந்தும் கூட ஆய்வு செய்வதில்லை. மாதாமாதம் வரவேண்டிய “கட்டிங்கிற்கும் கமிஷனுக்கும்” உணவு
பாதுகாப்புத்துறையினர் கட்டுப்பட்டு உறக்கத்தில் உள்ளனரா? என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர். ஆகவே அரசு நிர்வாகம் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு வாடிக்கையாளர்கள் உயிருக்கு உலை வைக்கும் மஹாராம்ஸ் ஸ்வீட்ஸிற்கு சொந்தமாக, திருச்சி தில்லைநகர், சிந்தாமணி பஜார், சத்திரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் கிளைகளில் உரிய ஆய்வு செய்வதுடன், கடையை சீல் வைத்து இதன் உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கும் பயம் வரும் என பொதுமக்கள் கொதிப்புடன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்