மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (த.வெ.க.) அமோக வெற்றி… ‘தகரம்’ என வர்ணித்தவர்களுக்கு ‘மரகதம்’ என நிரூபித்து காட்டினார்..!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரகதம் குமரவேல். அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த தொகுதியில் த.வெ.க.சார்பில் யாருக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் மரகதம் குமரவேலுக்கே வாய்ப்பு வழங்கினார், த.வெ.க. தலைவர் விஜய். அவரும் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றினார். ஆனால் அவர் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்துக்கு மாறியதால் பல இடங்களில் அவருக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பல இடங்களில் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை கூட ஏற்பட்டது. இதனால் அவரது வெற்றி பாதிக்கப்பட கூடும் என்று கருதப்பட்டது. மேலும், இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பரந்தாமன் இந்த தொகுதியில் மரகதம் குமரவேல் ‘தகரம்’ ஆவது உறுதி என்று வர்ணித்தார். ஆனால், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் போது ஆரம்பம் முதலே மரகதம் குமரவேல் எந்த வித தடையும் இன்றி முன்னிலை பெற்றார். அவரை ‘தகரம்’ என்று வர்ணித்த திமுக வேட்பாளர் பரந்தாமன் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இறுதியாக இந்த தொகுதியில் மரகதம் குமரவேல் 19,303 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
வெற்றி நிலவரம்,
மரகதம் குமரவேல் (த.வெ.க.) -67, 819
பரந்தாமன் (திமுக) -48, 516
கணிகா சம்பத் (அதிமுக)-43, 233
சுகந்தி (சிபிஎம்) -1772
ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி) -1370.

Comments are closed.