Rock Fort Times
Online News

தமிழகத்தில் உள்துறை செயலாளர் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்….!

தமிழகத்தில் உள்துறைச் செயலாளர் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலராகப் பணியாற்றி வந்த டாக்டர் மணிவாசன், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் (TANSIDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த கார்த்திக், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் அரசின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட மின்துறை நிறுவனங்களின் தலைவராகவும், மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றி வந்த அருண் ராய், நிதித்துறையின் செலவினப் பிரிவு அரசுச் செயலராக மாற்றப்பட்டுள்ளார். நிதித்துறையின் செலவினப் பிரிவு அரசுச் செயலராகப் பணியாற்றி வந்த வெங்கடேஷ், வேளாண்மை, மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராகப் பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுவதற்காக அவரது சேவை அந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் அவர் செயல்படுவார். இதற்காக நில நிர்வாக ஆணையர், உள்துறை, மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் அரசின் முதன்மைச் செயலர், வேளாண் உற்பத்தி ஆணையர் ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்கள் நியமன நாளில் இருந்து ஓராண்டு காலத்திற்கோ அல்லது அவற்றின் தேவை முடிவடையும் வரையிலோ, இதில் எது முந்தையதோ அதுவரை நடைமுறையில் இருக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் மாற்றம்,

இதனிடையே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த சிவ கிருஷ்ணமூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தேனி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த டாக்டர் வைத்திநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுவதற்காக அவரது சேவை அந்த வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்