Rock Fort Times
Online News

‘மகளிர் வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் ஒரு வகையில் ஆண்களுக்கும் பயன்… எப்படி தெரியுமா?

கடந்த திமுக ஆட்சி காலத்தின் போது நகரப் பேருந்துகளில் பெண்கள் விலையில்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் ‘ மகளிர் விடியல் பயண திட்டம்’ கொண்டு வரப்பட்டது. தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் மகளிர் விடியல் பயணத் திட்டம் ‘மகளிர் வெற்றிப்பயணம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 40 கிலோ மீட்டர் வரை அரசு பேருந்துகளில் விலை இல்லாமல் மகளிர் பயணிக்கலாம். இதன்மூலம் இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக அளவு பயன் பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டண சலுகை கிடைத்துள்ளது. இது எப்படி என்றால் நெல்லை- திருச்செந்தூர் இடையே முன்பு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. அது தற்போது ரூ.38 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று நெல்லை-தூத்துக்குடி இடையே இடைநில்லா பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ.40-ம், சாதாரண பேருந்துகளில் ரூ.35 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல வேலூர் மண்டலம் சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெற்றிப்பயணம் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் 128 பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வெற்றிப்பயணம் பேருந்துகளில் ஆண்களுக்கு 10 ரூபாயாக இருந்த டிக்கெட் கட்டணம் 7 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி போன்ற பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது. திருச்சி கோட்டத்தில் 43 எக்ஸ்பிரஸ் பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து துறையூருக்கு வழக்கமாக எக்ஸ்பிரஸ் பேருந்து இயக்கும்போது ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தற்போது ஆண்களுக்கு ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் அரசு பேருந்துகளில் பயணிக்கும் ஆண் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்