Rock Fort Times
Online News

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்…!

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களாகக் கருதப்படுகின்றன. இந்த நாட்களில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து, தளிகை படைத்து வழிபடுவது பல குடும்பங்களில் தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று(03-10-2026) பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் காலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில்
காத்திருந்து நம்பெருமாளையும், அரங்கநாயகி தாயார் மற்றும் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட ஏனைய சன்னதிகளுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். இதேபோல சிறப்புவாய்ந்த ஓடத்துறை காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோவிலில் மூலவர் நரசிங்க பெருமாளுக்கு வஜ்ரங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புடன் காட்சியளித்தார். இந்தக் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் மற்றும் ஸ்ரீ ராமபிரானை மனமுருக வழிபட்டு செல்கின்றனர். திருச்சி , கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் மூலவர் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சாற்றப்பட்டு சேவை சாதித்தார். தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சஞ்சீவன ஆஞ்சநேய சுவாமி ஆலயத்தில் மூலவர் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சேவைசாதித்து வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்