Rock Fort Times
Online News

தவெக அமைச்சரவையில் பா.ம.க.வுக்கு இடமா? “முற்றிலும் வதந்தி”…* சௌமியா அன்புமணி திட்டவட்டம்…

தமிழ்நாட்டில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பா.ம.க. இணையவுள்ளதாகவும், அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர் சௌமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 118 தொகுதிகள் கிடைக்காத நிலையில், அதிக இடங்களைக் கைப்பற்றிய த.வெ.க. 107 தொகுதிகளுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது. இந்த அரசுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. எனினும், தற்போதைய சூழலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் த.வெ.க. கூட்டணியில் இல்லை என அறிவித்துள்ளன. வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் த.வெ.க. வெற்றி பெற்றாலும், அதன் பலம் 109 ஆக மட்டுமே உயரும். இதனால் ஆட்சியைத் தக்கவைக்க மேலும் சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வின் 4 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆரம்பத்தில் த.வெ.க. அரசை விமர்சித்து வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சமீபகாலமாக அமைதியான போக்கைக் கடைப்பிடித்து வருவதால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படலாம் என்றும் தகவல்கள் பரவின. மேலும், இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது, பா.ம.க. கூட்டணியில் இணைந்தால் சௌமியா அன்புமணிக்கு பள்ளிக் கல்வி, சுற்றுச்சூழல் அல்லது வனத்துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறை வழங்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சௌமியா அன்புமணியிடம், த.வெ.க. அமைச்சரவையில் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவையெல்லாம் முற்றிலும் வதந்தி. இதுபோன்ற வதந்திகளுக்கு ஊடகங்களும் பொதுமக்களும் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள்” என்று தெரிவித்தார். இதன்மூலம், த.வெ.க. அமைச்சரவையில் சௌமியா அன்புமணி இணையவுள்ளதாகப் பரவி வந்த தகவல்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்