வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தி:* இனி 30 நாட்கள் ரீசார்ஜ் திட்டத்தை செயல்படுத்த அதிரடி உத்தரவு…!
இன்றைய நவ நாகரீக உலகில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக செல்போன் மாறிவிட்டது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பமான கம்பெனிகளை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஒருவர் ரீசார்ஜ் செய்யும்போது 28 நாட்கள் தான் பேசுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. கண்மூடி கண் திறப்பதற்குள் 28 நாட்கள் ஓடி விடுகிறது. இதற்காகவே மாதத்தில் ஒரு தொகை செலவிட வேண்டி இருக்கிறது. ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியருக்கு 30 நாட்களுக்கு பிறகு தான் சம்பளம் வழங்கப்படுகிறது.ஆனால், ரீசார்ஜ் திட்டம் மட்டும் 28 நாட்கள் என குறைக்கப்படுவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இரண்டு நாட்கள் குறைப்பு மூலம் ஒரு வருடத்தில் 12 மாதங்களுக்கு பதிலாக 13 மாதங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், இணையதள வசதி
பயன்படுத்தாத வாடிக்கையாளர்களிடமும் எவ்வித கட்டண குறைப்பும் இன்றி அதே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வணிகச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி, கடந்த மார்ச் 11ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றிய ஆம்ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த எம்.பி. ராகவ் சதா, செல்போன் நுகர்வோரின் சுமையை குறைக்க 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்புக்கான 13வது திருத்த விதிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனிமேல் 30 நாட்கள் முழுமையாக செயல்படும் வகையிலான ரீசார்ஜ் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இணைய வசதி தேவையில்லாத பயனர்களுக்காக அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி மட்டுமே கொண்ட குறைந்த கட்டண சிறப்பு வவுச்சர்களையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனியாக வழங்க ஆணையிட்டுள்ளது. இதனை வெகுவாக வரவேற்றுள்ள எம்.பி ராகவ் சதா, ‘இது குறைந்த பட்ஜெட் கொண்ட ஏழை எளிய சாமானிய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதன்மூலம் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்வதற்குப் பதிலாக 12 முறை மட்டுமே செய்தால் போதுமானது என்ற நற்செய்தியை வழங்கிய மத்திய அரசுக்கும், டிராய் அமைப்பிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.