விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியது. இதைத்தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், பால் விலையை அந்த நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. ஆரோக்கியா நிறுவனம் கடந்த 21-ந் தேதி பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரையிலும் தயிர் விலையை ரூ. 2 உயர்த்தியது. இந்த நிலையில் மற்ற தனியார் பால் நிறுவனங்களும் நாளை(26-09-2026) சனிக்கிழமை முதல் பால்விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனிவாசா உள்ளிட்ட பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 4 ரூபாய் வரையில் உயர்த்துகின்றன. அதன்படி சமன்படுத்தப்பட்ட 500 மில்லி பால் 31 ரூபாயில் இருந்து 32 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 35 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 40 ரூபாயில் இருந்து 42 ரூபாய் ஆகவும் உயருகின்றன. ஒரு லிட்டர் பாக்கெட் சமன்படுத்தப்பட்ட பால் 59 ரூபாயில் இருந்து 61 ரூபாயாகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் 68 ரூபாயில் இருந்து 70 ரூபாய் ஆகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 78 ரூபாயிலிருந்து 81 ஆகவும் உயர்த்தப்படுகிறது. 500 கிராம் தயிர் ஒரு ரூபாய் கூடுகிறது. தனியார் பால் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவு என்பதால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் ஆவின் பால் மீது திரும்ப கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Comments are closed.